உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் புதிய இணைய தளம்

குருவே சரணம் குரு பாதமே சரணம்

cropped-mahaperiyava-home
உங்கள் கவனத்திற்கு,
நேற்று முதல் வழக்கமான பதிவுகள் நம்முடைய புதிய இணைய தளமான periyavaarul.com இல்  வெளியாகிக்கொண்டு இருக்கிறது. ஆகவே உங்களை நான் கேட்டுக்கொள்வது வழக்கமான  பதிவுகளை படித்து மஹாபெரியவாளின் அற்புத அனுபவங்களை அனுபவிக்க இன்று முதல்  உங்கள் வருகையை நம்முடைய புதிய இணைய தளத்தில் தடம் பதித்து உங்கள் கண்களுக்கும் ஆதாமாவிற்கும் சந்தோஷத்தை அளியுங்கள்.
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்

அன்றைய குழந்தை இன்று பருவம் எய்தியது

நம்முடைய அன்றைய குழந்தை

இன்று பருவம் எய்தியது

நம்முடைய  periyavaarul.wordpress.com  குழந்தை இன்று பருவம் எய்தியது. இன்று நீங்கள் நம்முடைய அலங்கரிக்கப்பட்ட குழந்தையை பார்த்து ஆசீர்வாதம் செய்ய வேண்டிய நாள். இன்று முதல் நம்முடைய பதிவுகள் அணைத்தும் புதிய இணைய தளமான periyavaarul.com இல் வெளியாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உறுப்பினர்கள் மட்டுமல்லாது பார்வையாளர்களுக்கும் இந்த இணைய தளம் இனிய அழைப்பு விடுகிறது. வழக்கம் போல் உங்களுடைய அன்பயும் ஆதரவையும் தொடர்ந்து அளித்து இந்த இணைய தளம் மேலும் வளர உறுதுணையாக  இருக்க வேண்டுகிறேன்
உங்கள் வரவு நாள் வரவாகுக.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்

திவ்ய தேச தரிசனங்கள் -004 உத்தமர் கோவில்

இன்று இந்த திவ்ய தேச பதிவு வண்ணப்படங்களுடன் நம்முடைய புதிய இணைய தளமான. periyavaarul.com வெளியாகி உள்ளது. அங்கும் பார்த்து பெருமாளை சேவித்து உங்கள் எண்ணங்களை அங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

திவ்ய தேச தரிசனங்கள் -004

உத்தமர் கோவில் அல்லது திருக்கரம்பனூர்

இந்த அற்புதமான திருக்கோவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவில் சமயபுரம் டோல் கேட்டிற்கு அருகில் உள்ளது. இந்த திருத்தலத்தின் சிறப்பு பிரும்மா சிவன் திருமால் மூவரும் ஒரே கோவிலில் தரிசனம் தருவது. உத்தமர்கோவிலை வைஷ்ணவ திருத்தலங்களின் பெயரான திருக்கரம்பனூர் என்றும் அழைப்பார்கள்..
மும் மூர்த்திகள்  தங்களது மனைவிமார்களுடன் தரிசனம் தருவதால் இங்கு குடும்பத்துடன் வந்து வழிபட்டால் உங்கள் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.. இந்த திருத்தலம் திருமங்கை அழவாரல் மங்களா சாசனம் செய்யப்பட்து..
நூற்றி எட்டு வைணவ திருத்தலங்களில் உத்தமர் கோவிலும் ஒன்று. .சிவபெருமானின் திருக்கோலங்களில் ஒன்றான பிச்சாண்டார் இங்கு தான் திருக்கோலம் பூண்டது.  அதனால் தான் இந்த திருத்தலத்திற்கு பிச்சாண்டார் கோவில் என்ற பெயரும் ஏற்பட்டது.
இங்கு பிரும்மா ஞான சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக தரிசனம் கொடுக்கிறார்… ஒரு முறை சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டியில் பிரும்மா சிவபெருமானின் அடிமுடியை காண முயன்று தோல்வி அடைந்து சிவபெருமானின் தலையில் இருந்து கீழே விழுந்த   தாழம்பூவுடன் ஒரு  உடன்படிக்கை செய்து கொண்டார்.
அதன்படி சிவபெருமான் அடிமுடியை பிரும்மா பார்த்து விட்டதாக தாழம்பூ  பொய் சாட்சி சொல்லியது. உண்மையை உணர்ந்து கொண்ட சிவபெருமான் பிரம்மாவிற்கு ஒரு சாபம் இட்டார். இனிமேல் உனக்கென்று எந்தக்கோவிலிலும் தனியாக சன்னதி இருக்காது என்று.. அதே போல் தாழம்பூவிற்கு ஒரு சாபம் கொடுத்தார். உன்னை யாரும் பூஜிக்கும் மலர்களில் ஒன்றாக பயன் படுத்த மாட்டார்கள் என்று.,
பிறகு பிரும்மா மனம் வருந்தி சிவபெருமானை தியானித்து தவத்தில் இருந்தார். பிரும்மாவின் தவ வலிமையை பார்த்து மகிழ்ந்த சிவபெருமான்  பிறகு இங்கயே உனக்கென்று ஒரு தனி சன்னதி உருவாகும் என்று வரம் கொடுத்தார்.. அதன்படி இங்கு பிரும்மா தன்னுடைய   மனைவி  சரஸ்வதியுடன் தரிசனம் கொடுக்கஆரம்பித்தார்.
இங்கு கல்விக்கடவுளான சரஸ்வதி தெற்கு பார்த்து தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். வழக்கமாக கையில் வைத்திருக்கும் வீணைக்கு பதிலாக ஏட்டு சுவடியை கையில் வைத்திருக்கிறாள். மற்றொரு கையால் அபய ஹஸ்த முத்திரை கொடுக்கிறாள்.
இங்கு பள்ளிக்கு போகும் குழந்தைகள் வேண்டி வணங்கிக்கொண்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதே போல் உத்தியோகத்தில் பதவி உயர்வு போன்றவற்றிற்கு வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இங்கு விஷ்ணு பகவான் புருஷோத்தமன் என்ற பெயரால் கிழக்கு நோக்கி பள்ளிகொண்டு திருமார்பில் மஹாலக்ஷ்மியை  தாங்கிக்கொண்டிருக்கிறார்.. தாயாரின் திருநாமம் பூரணவல்லி தயார் தனி சன்னதியில் அழகின் மறு உருவமாக காட்சி தருகிறார்.
ஒரு முறை சிவபெருமான் பிரும்மாவின் நான்கு தலைகளில் ஒன்றை கொய்து விட்டதால் பிரும்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகி  பிச்சை பாத்திரம் ஏந்தி அலைந்தார். பிறகு இங்குள்ள பூரணவல்லி  தயார் தான் பிச்சையிட்டு தோஷ நிவர்த்திக்கு வழி  வகுத்தாள்.இந்த தாயாரை வழிபட்டால் உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். சங்கடங்கள் விலகும் என்பது அன்றில் இருந்து இன்று வரை கடைபிடிக்கும் ஒரு பிரார்த்தனை..
பிச்சாடனராக காட்சி கொடுக்கும் சிவபெருமானை இங்கு  வழிபட்டால் துர் சிந்தனைகள் அகலும் கெட்ட செயல்கள் அறவே அற்றுப்போகும்.தசரத சக்கரவர்த்தி பிள்ளை பாக்கியம் வேண்டி வழிபட்ட சிவலிங்கம் இன்றும் இங்கு உள்ளது. இதற்கு தசரத லிங்கம் என்று பெயர்.  பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து அர்ச்சித்து வழிபட்டால் நிச்சயம் பிள்ளை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இங்கு ஏழு குருமார்களும் ஒரு சேர காட்சி கொடுக்கின்றனர். சிவ குரு, விஷ்ணு குரு பிரும்ம குரு ஸ்ரீ சக்தி குரு தேவா குருவாகிய பிரகஸ்பதி அசுரர் குருவான சுகராச்சாரியார் ஸ்ரீ சுப்ரமணிய குரு  ஆகிய சப்த   குரு மார்களும் இங்கு தரிசனம் கொடுக்கின்றனர். இவர்களை வழிபட்டால் உங்களுக்கு குருவே இல்லை என்ற ஏமாற்றமும் ஏக்கமும் தொலைந்து போகும்.
வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஏழு குரு மார்களையும் வணங்கி பிறகு மும் மூர்த்திகளையும்  தம்பதி சமேதராக வணங்கினால் கல்வி ஞானம் கேள்வி ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். .இவ்வாறு வணங்கினால் கல்வியில் மேன்மை தெளிந்த ஞானம் சகல யோகம் வியாபார அபிவிருத்தி மனதுக்கு பிடித்த திருமணம் கண்ணுக்கு அழகான குழந்தைகள் போன்றவைகள் வாய்க்கப்பெறுவர்கள்.
மாணவர்கள் இங்கு ஒரே ஒரு முறை வழிபட்டாலும் குரு யோகம் கைகூடும். கல்வி மேன்மை பெறும். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் நல்ல முறையில்  தேர்ச்சி அடைவார்கள்.
வழிபாட்டு நேரம் : காலை 06.30 மணி முதல்12.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல 08.00 .மணி வரை
தொலை பேசி : 0431-2591-466  – 2591040
உங்கள் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அதாவது கண்ணுக்கும் மனதுக்கும் பிடித்த கணவன் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகான குழந்தைகள் உங்கள் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் கேள்வி  ஞானம் சிறந்து விளங்கவும் உங்கள் இல்லங்களில் ஐஸ்வர்யம் பெருகவும் இறை அமைதியும் ஆனந்தமும் நிரம்பி இருக்கவும் உத்தமர் கோவிலுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சென்று தரிசித்து வரவும்.நீங்கள் கேட்டது அனைத்தும் கிடைக்கும்.

ஓம் நமோ நாராயணா                        ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவா பக்த கோடிகளே உங்கள் கவனத்திற்கு

cropped-mahaperiyava-home

குருவே சரணம் குரு பாதமே சரணம்

மஹாபெரியவா பக்த கோடிகளே

உங்கள் கவனத்திற்கு

நம்முடைய இன்றைய பதிவான என்வாழ்வில் மஹாபெரியவா தொடர் எண்  037 இந்த இணைய தளத்தில் மட்டுமல்லாது நம்முடைய புதிய இணையதளமான  periyavaarul.com லும் வெளியாகி இருக்கிறது. ஆகவே இன்றிலிருந்தே நீங்கள் புதிய இணைய தளத்திற்கு வருகை புரிந்து பதிவுகளை படித்து உங்கள் எண்ணங்களை அங்கே பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நம்முடைய புதிய இணையதளம் வருகிற பதினாறாம் தேதி மஹாபெரியவா திரு நக்க்ஷத்திரமான  அனுஷம் நன்னாளான  16/12/2017 சனிக்கிழமை அன்று   உலகில் உள்ள எல்லா பக்தர்களுக்காகவும் சமர்க்கிப்படுகிறது.
இந்த புதிய இணைய தளம் உங்களின் வசதிக்காக கோவில்களின் படங்கள் மற்றும் புராதன சிற்பக்கலைகளின் படங்கள் மஹாபெரியவாளின் பலவேறு கட்டங்களில் எடுத்த படங்கள் எல்லாவற்றையும் கண்ணை கவரும் வண்ணங்களை தாங்கி வெளிவருகிறது.
நம்முடைய  குழந்தை இன்று பருவமெய்தி வளர்ந்து நிற்கிறது. இனி இந்த வளர்ந்த குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்க்கவேண்டியது நம்முடைய கடமையாகிறது.
உங்கள் வருகையை உறுதிப்படுத்தும் விதத்தில் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் கமெண்டுகளாக இங்கே  பதிவு செய்தால் என்னுடைய மனச்சோர்வும் உண்டால் சோர்வும் நொடியில் நீங்கி உங்களுக்கு புதிய புத்துணர்ச்சியுடன் சேவை செய்யும் பாக்கியத்தை நான் பெற்றவன் ஆவேன்.
புதிய இணையத்திற்கு
உங்கள் வருகையை ஆவலுடன்  எதிர் நோக்கும்
என்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்

என் வாழ்வில் மஹாபெரியவா -037

என் வாழ்வில் மஹாபெரியவா -037

இதை பின்பற்றுங்கள்

ஒரு நல்ல சிஷ்யனுக்கு

உண்டான குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்

ஒரு குரு உங்களை அழைப்பார்

அல்லது இறைவன் உங்களுக்கு

ஒரு நல்ல குருவை காண்பிப்பார்

இது சத்தியம்

நல்ல சிஷ்யனுக்கு உண்டான

குணங்களை தனியாக எழுதுகிறேன்

ஒவ்வொருவர் வாழ்க்கையையும் இரண்டாக பிரிக்கலாம். அறுபது வயதுக்கு  முன் அறுபது வயதுக்கு  பின். இதை முன் அறுபது பின் அறுபது என்று பிரித்து கொள்ளலாம். முன் அறுபது என்பது குழந்தை பருவத்தில் இருந்து பால்யத்தையும் தாண்டி ஒரு குடும்பஸ்தன் ஆகும்  வரையில் கடக்கும் பருவம் வரை..
பின் அறுபது என்பது வயோதிகமும் வயோதிகத்தையும் தாண்டி இறுதி நாள் வரையில் வாழும் பருவம்.. முன் அறுபது என்பது வாழ்ந்து முடிந்த காலம். வாழ்ந்து முடிந்த காலம் என்று இறந்த காலத்தில் சொல்வதால்   அந்த கடந்த காலத்தை நம்மால் எதுவும் செய்ய முடியாது.
ஆனால் பின் அறுபது என்பது இன்னும் நம் கையில் தான் உள்ளது. இங்குதான் வாழ்க்கை வாழ்வதற்கே நம் வாழ்க்கை நம் கையில்   என்ற சொற்றொடர் மிகவும் பொருத்தமாக இருப்பதை உணர்கிறோம்.
முன் அறுபது என்ற கடந்த காலத்தை நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கலாம். காலம் வேண்டுமானால் கடந்து சென்றிருக்கலாம். ஆனால் கடந்த காலம் நமக்கு கொடுத்த ஞானத்தையும் அனுபவத்தையும் யாரும் ஒன்றும் செய்து விட முடியாது.. நம் அனுபவம் நம் கையில் நம் வாழ்க்கை நம் கையில். இதுதான் வாழ்க்கை என்னும் தத்துவத்தின் உள் அர்த்தம்.
முன் அறுபதில் மோசமான வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே. அதனால்  வாழ்க்கையே வீணாகி விட்டது என்ற கவலை வேண்டாம்…மனிதர்கள் வேண்டுமானால் வாழ்க்கையை ஒரு வியாபாரமாக பார்க்கலாம்..ஆனால் இறைவன் வாழ்க்கையை எப்படி பார்க்கிறான் தெரியுமா?. முன் அறுபத்தின் மூலம் பெற்ற அனுபவத்தையும் ஞானத்தையும் வைத்து பின் அறுபதில்  எப்படி வாழ்கிறான் என்றுதான் பார்க்கிறான்..
உண்மையான வாழ்க்கை எது தெரியுமா. பின் அறுபதுதான் உண்மையான வாழ்க்கை. முன் அறுபதின் அனுபவமும் ஞானமும் மட்டுமே பின் அறுபதின் வாழ்க்கைக்கு வித்திடுகிறது. முன் அறுபதில் எல்லா மனிதர்களுமே தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்து விடுகிறார்கள். ஒவ்வொரு பாவமும் நம் ஞானக்கண்ணை   திறக்கிறது.
வாழும்பொழுது மரணத்தை பற்றி கவலைப்படாமல் ஆட்டமாய் ஆடுகிறான். மரணத்தின் பொழுது வாழ்ந்த வாழ்க்கையை பற்றி கவலை படாமலேயே   உயிரை விடுகிறான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழ்க்கை. என்னும் நாடகத்தில் என்ன ஒரு ஆட்டம். எல்லாமே சாஸ்வதம் என்று நம்புகிறான்.  தானே ஒரு கதா பாத்திரமாகி வாழ்க்கை என்னும் நாடகத்தில்  நடிக்கிறான்.
சென்றதை விடுங்கள்.  இந்த நொடியில் இருந்து எப்படி வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். இறைவனும் இறைவனுக்கு சாட்சியாக பஞ்ச பூதங்களும் நம்முடைய செயல்களை கவனித்துக்கொண்டே இருக்கின்றன.. வாழ்க்கையின் முன் பாதியில் இழைத்த பாவங்களை  பின் பாதியில் கழுவுகொள்ளலாம். நம்முடைய   உண்மையான முயற்சிக்கு இறைவனும் நம்முடன் துணை இருப்பான்.
இப்பொழுது நான் இருக்கும் சூழ்நிலையும் இதுதான். முன்  பாதியில்  தெரிந்தோ தெரியாமலோ செய்த  பாவங்களை இறைவன் துணையோடு போக்கிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் இதுநாள் வரையில் பட்ட கஷ்டங்களும் பாவங்களும் என்னை வாட்டின. தவறை உணர ஆரம்பித்தேன். இரவுகளில் தூக்கமில்லாமல் அவதிப்பட்டேன்.
இறைவனிடமே கெஞ்சியிருக்கிறேன். எப்படி தெரியுமா? இறைவா இன்று ஒரு நாள் மட்டும் கவலையை மறந்து தூங்க தூக்கத்தை கொடு என்று.. இப்படி நான்  கெஞ்ச வேண்டுமானால் ஒரு நல்ல தூக்கத்திற்கு நான் எவ்வளவு ஏங்கி இருக்கக்கூடும்.
என்னை சுற்றி இருட்டாக இருக்கும் பொழுது அது எனக்கு பாதுகாப்பு என்று எண்ணினேன்.பொழுது விடியப்போகிறதே  என்று எண்ணும்பொழுது எனக்குள் ஒரு குலை நடுக்கமும் இதயமே வெடித்து விடும் போல சோகம். என்னை கவ்விக்கொள்ளும்.
எல்லோருக்கும் சூரிய உதயம் ஒரு நாளின் துவக்கம் என்றால் எனக்கு மட்டும் சூரிய அஸ்தமனம் தான் நாளின் துவக்கம்…வாழும் நாளிலேயே நான் நரகத்தை பார்த்தது மட்டுமல்ல அனுபவித்தும் இருக்கிறேன். படிப்பிருந்தும் ஞானம் இருந்தும்  எனக்கும் என் வாழ்க்கைக்கும் எதுவும் பயன் படவில்லையே.. இதுதான் கர்மாவோ?
நான் வாழ்க்கையில்  பட்ட கஷ்டங்களையும் நான் பட்ட  வேதனைகளையும் இவ்வளவு வெளிப்படையாக சொல்வதில் எனக்கு கூச்சமோ வெட்கமோ இல்லை. என்னுடைய அனுபவத்தால் ஒரு ஆத்மா நம்பிக்கையுடன் வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அது என் ஆத்மாவிற்கு கிடைத்தவெற்றி.
என் வாழ்க்கையின் வெற்றியில் இருந்து மஹாபெரியவாளை நிச்சயம் பிரிக்க முடியாது. உண்மையாகச்சொல்கிறேன் மஹாபெரியவா என்னை அழைத்து ஆட்கொள்ளவில்லையென்றால் நான் இன்றும் திசை தெரியாமல்  காற்றில் பறக்கும் குப்பை காகிதமாக தான்  இருந்திருப்பேன்..
ஆனால் நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் என்னை குருவின் தேவையை மட்டுமல்ல குருவின் முக்கியத்துவத்தையும் உணர வைத்தது.  ஒரு குருவை தேடி. அலைந்தேன். ஒரு நல்ல குரு.வுக்கு ஏங்கினேன்.இறுதியில் இறைவனே என்னை அழைத்து நான்தான் உனக்கு குரு என்று சொல்லி அழைத்து ஆட்கொண்டார்.
நான் பட்ட கஷ்டங்களையும் கவலைகளையும் உங்களிடம் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து வருகிறேன். ஏன் தெரியுமா? நான் ஒளிவு மறைவில்லாமல் சொன்னால்தான் உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும். தேவையும் அவசியமும் உங்களுக்கு உங்களுக்கு புரியும்..
என் சிந்தனை தெளிவானது. எண்ணங்களில் ஒரு புனிதத்தை கண்டேன்..இங்குதான் மஹாபெரியவா என்னும் பிரபஞ்ச சக்தி என்னை அழைத்து ஆட்கொண்டது.. எனக்கு வாழ்க்கை  பயணத்தின் பாதை தெரிந்தது. இப்பொழுது மஹாபெரியவா கையை பிடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.. இங்கு தான் மஹாபெரியவா என் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த நேரம். 
ஒரு சிஷயனுக்கு உண்டான தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரு குரு உங்களை அழைப்பார் அல்லது இறைவன் உங்களை ஒரு குருவிடம் கொண்டு விடுவார். இந்த இரண்டில் ஒன்று நிச்சயம்.. என் அனுபவத்தில் நான் கண்டது இது.
இதுவரை என் வாழ்க்கை அனுபவத்திற்கும் மஹாபெரியவா அற்புதங்களுக்கும்  இடையே நடக்கும் இனிமையான போராட்டங்களையும் என் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
இந்த வார அற்புத அனுபவங்களை எழுதுவதற்கு முன்பாக வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களுக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களுக்கும் என்னுடைய அனுபவங்கள் மூலம் ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்தால் வாரம் தோறும் மஹாபெரியவா நிகழ்த்தும் அற்புதங்கள் மூலம் ஏற்றிய ஒளியை தூண்டி விட்டு ப்ரகாசப்படுத்த முடியாதா என்ற நம்பிக்கைதான் என் இந்த முயற்சி..
என் ஒரு விரல் வலியை கூட நான் பொருட்படுத்துவதில்லை. என் முயற்சி வெற்றி அடைய வேண்டும்.. இந்த அறிவுரையை இத்துடன் நிறுத்திக்கொண்டு இனி அற்புதங்களுக்கு உங்களை அழைத்துக்கொண்டு பயணிக்கிறேன். 
மஹாபெரியவா அற்புதங்களை சரீர  சுத்தி ஆத்ம சுத்தி பூர்ண சுத்தி என்று மூன்று வகையான தலைப்புகளில் உங்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.
சென்ற வாரத்தில் இருந்து என் சரீர சுத்தி பிரிவில் என்னுடைய உணவு பழக்கவழக்கங்களில் ஒரு பெரிய மாற்றத்தை மஹாபெரியவா கொண்டு வந்த்திருக்கிறார். இதன் ஆரம்பமாக சென்ற வாரத்தில் இனிப்பு என்பதை ஒரே இரவில்  அடியோடு ஒழித்தார்.
இது சம்பந்தமாக நான் சந்தித்த மனப்போராட்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இனி இந்த வார அற்புதத்திற்கு வருவோம்..பொதுவாகவே மஹாபெரியவாளின் சரீர சுத்தி உத்தரவுகள் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் வரும்.
அதனால் ஒவ்வொரு   இரவும் ஒன்பது  மணிக்கு இன்று என்ன   உத்தரவு வருமோ என்று பயந்துகொண்டே இருப்பேன்.. அன்றும் அப்படிதான் ஒரு உத்தரவு வந்தது. என்ன உத்தரவு என்பதை இந்தப்பதிவின் பிற்பகுதியில் கூறுகிறேன்.
என்னுடைய உணவு பழக்கவழக்கங்களில் என்னால் விட முடிந்தவை விடவே முடியாதவை என்று இரண்டு வகை உணவு பழக்கவழக்கங்கள் உண்டு… என்னால்.விடவே முடியாது என்னும் உணவுப்பழக்கத்தில் அரிசி சாதம் டீ காபி வெங்காயம் பூண்டு வகை உணவுகள் ஹோட்டல் உணவு வகைகள் ஆகியன. மேலே குறிப்பிட்ட உணவு வகைகளில் எதையும் இன்று  என்னை விட சொல்லக்கூடாது என்று வேண்டிக்கொண்டே இருந்தேன்.  . என்னை நேர் படுத்த வந்த ஆசானிடமே ஒரு வேண்டுதல்.. இது எப்படி இருக்கிறது.?
எனக்கு சிறு வயதில் இருந்தே அரிசி சாதம் என்றால் உயிர், இரவு என்ன உணவு இருந்தாலும் கடைசியில் சாப்பிட ஒரு வாய் தயிர் சாதமாவது வேண்டும். என்னுடைய பாட்டி என்னை சோற்றால் அடித்த சுவர் என்று கேலி பேசிக்கொண்டே இருப்பாள்.இரவில் ஒரு வாய் தயிர் சாதம் இல்லையென்றால் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது.அப்படியொரு பைத்தியம் சாதத்தின் மேல்.
நாங்கள் குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்றோமானால் எல்லோரும் அவரவர்களுக்கு பிடித்த பண்டங்களை கேட்பார்கள். ஆனால் நான் மட்டும் ஹோட்டல் முதலாளியிடம் கேட்பேன். ஒரு வாய் தயிர் சாதம் கிடைக்குமா.என்று. அவரும் வந்த நபர்களின் எண்ணிக்கையை பார்ப்பார் மொத்த தொகையை கணக்கெடுப்பர்.. பிறகு முடிவு செய்வார். முடிவு செய்து என்னிடம் சொல்லுவார்.
நீங்கள் மற்ற பண்டங்களை சாப்பிட்டு முடிப்பதற்குள் சாதம் வடித்து தயிரும் கொடுக்கச்சொல்கிறேன் என்பர். என்னுடன்  வந்தவர்கள்  எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. என்னை பின்வருமாறு  திட்டுவார்கள். “ஒரு மனுஷனுக்கு அப்படி என்னடா நாக்கு.” இப்போ நாங்கள் எல்லோரும் இருப்பதை சாப்பிடல்லை. என்று என்னை வசை படுவார்கள். என்ன செய்வது. என் மனசையும் நாக்கையும் கட்டுப்படுத்த முடியலை.
நான் இத்தனையும் ஏதற்கு எழுதுகிறேன் என்றால் என்னால் கட்டுப்படுத்தவே முடியாத ஒரு  பழக்கத்தை ஒரே இரவில் எப்படி மஹாபெரியவா கட்டுப்படுத்தினர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள   வேண்டும்.என்பதற்காகத்தான்.

அன்றைய அற்புதத்தின் ஆரம்பம்:

இரவு ஏழு மணி. என்னுடைய ஸஹஸ்ரநாம பாராயணத்தை முடித்துக்கொண்டு காயத்ரி ஜெபத்திற்கு உட்கார்ந்தேன்.நான் வழக்கமாக காலையில் பிரும்ம முகூர்த்த பிரார்த்தனைக்கு பிறகு ஒரு சஹஸ்ர காயத்ரி ஜெபமும் மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு பிறகு ஒரு சஹஸ்ர காயத்ரியும் ஜெபிப்பேன்.
அன்றும் நல்லபடியாக முடித்து விட்டு மஹாபெரியவாளிடம் நான் என்  அனுஷ்டானங்களை முடித்ததை சொல்லிவிட்டு இரவு சாப்பிட உட்கார்ந்தேன்.இரவில் வழக்கமாக இரண்டு தோசைகளும் புளி போடாமல் பாசிப்பருப்பு குழம்பும் சாப்பிடுவேன்.. அன்றும் எனக்கு பாசிப்பருப்பு குழம்பு. ஆனால் மற்றவர்களுக்கு எண்ணெய் மிளகாய் பொடி   .முருங்கைக்காய் சாம்பார் சர்க்கரை எல்லாம்..
இங்குதான்  நான்  ஒன்றை உணர்ந்தேன். கண்ணுக்கு முன் இவ்வளவு பண்டங்கள் வைத்திருந்தும் என் கவனமெல்லாம் புளி இல்லாத பாசிப்பருப்பு மேலயே இருந்தது. நான் எந்த நிலையிலும் நாக்கையும்  என் மனதையும் என்னிடம் இருந்து இழக்கவேயில்லை.
மற்றவர்கள் கூட மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படி சாத்தியம். கண்ணுக்கு முன்னால் எல்லோரும் சாப்பிடுகிறோம் ஆனால் உங்கள் நாக்கு மட்டும் எப்படி நீங்கள் சொல்வதை கேட்கிறது என்றார்கள்.
மேலும் அன்றைக்கு இருந்த முதியவர்கள் சொன்னார்கள்  நீண்ட நாட்கள் கடுமையான தவம் செய்தால் தான் ஒருவரால் நாவையும் மனதையும் அடக்க முடியும். உங்களால் எப்படி முடிகிறது என்று கேட்டார்கள்.
நான் ஒன்றை மட்டும் உணர்ந்தேன்.என்னுடைய நாக்கையும் மனதையும் என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இந்த சரீர சுத்தி அற்புதத்தை ஒரே வரியில் சொல்லி விடலாம். பெரியவா இதை விடச்சொன்னார் நான் விட்டேன் என்று.
ஆனால் அற்புதத்தின் ஆழத்தையும் அடி நாதத்தையும் நான் அடைந்த மனப்போராட்டங்களையும்   உங்களால் புரிந்து கொள்ள முடியாது.. நானே நான்  அனுபவித்த அற்புதங்களை எழுதும் பொழுதான் உணர்கிறேன்.

நான் ஒரு காவி அணியாத ஒரு சன்யாசி:

அன்று வீட்டில் இருந்தார்கள் எல்லோரும் ஒரு சேர சொன்னது “நான் ஒரு காவி அணியாத ஒரு சன்யாசி என்று” எனக்கு இந்தவார்த்தைகள் மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் அன்று வரை நான் விட்டதையெல்லாம் பட்டியலிட்டார்கள்.எனக்கே மலைப்பாக இருந்தது. நானா இவ்வளவையும் விட்டேன் என்று எனக்குள் சொல்லமுடியாத மகிழ்ச்சியாக இருந்தது.
சொந்தங்களிடம் இருந்து இந்த வார்த்தையை வாங்குவதற்கு அறுபது வருடம் காத்திருந்தேன். அதுவும் மஹாபெரியவா என் வாழ்வில் அடி எடுத்து வைக்கவில்லை என்றால் நான் என்னவாக ஆகியிருப்பேன் என்று நினைத்தாலே எனக்கு  பயமாக இருக்கிறது. .
அப்பொழுதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. மஹாபெரியவா என்னை ஒன்றை விட சொல்வதற்கு முன் என் மனதை தயார் நிலையில் வைத்து விட்டுத்தான் என்னிடம் விட சொல்கிறார். என்னாலும் விட முடிகிறது.
இப்படியே சாப்பிட்டுவிட்டு நான் என்னுடைய பதிவுகளை எழுதிக்கொண்டிருந்தேன். நேரம் சரியாக எட்டு மணி முப்பது நிமிடங்கள்.. எந்த நேரமும் மஹாபெரியவாளின் சரீர சுத்தி ஆணை வரலாம். நான் மனதுக்குள் வேண்டிக்கொண்டே இருந்தேன்,என்னை சரி செய்ய வந்த ஆசானிடமே ஒரு கோரிக்கை. எனக்கு சிரிப்பாக இருந்தது
மணி ஒன்பதை தொட்டு விட்டது. “ஏண்டா” என்னும் சொல் என் காதிற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டு விடும்.

அற்புதம்:

சரியாக மணி ஒன்பது. ஏண்டா ” குரல் கேட்டு விட்டது. சொல்லுங்கோ பெரியவா உங்கள் குரலை கேட்கத்தான் காத்திருந்தேன் என்றேன்.
பெரியவா: என் குரல் வராமல் இருந்திருந்தால் நீ சந்தோஷமாக இருந்திருப்பாய் இல்லையடா.
G.R.: ஐயையோ அப்படி இல்லை பெரியவா. நீங்கள் என்னை எதை விடச்சொன்னாலும் என் மனதையும் நாக்கையும் நீங்கள் அடக்கி விட்டுத்தான் என்னிடம் சொல்லுகிறீர்கள். இல்லாவிட்டால் என்னால் இப்படி ஒரே ராத்திரியில் விட முடியுமா என்று கேட்டேன்.
பெரியவா: ஏண்டா குழந்தையில் இருந்து உனக்கு பிடித்த உணவு எது என்று கேட்டார்.
G.R. சாதம் பெரியவா என்றேன்.
பெரியவா: அப்போ அறுபது வருஷமா சாதம் சாப்பிட்டுண்டே இருக்கே. என்ன சாதித்தாய். வயிறு எல்லாம் போட்டு சர்க்கரை வியாதியையும் வரவழிச்சுண்டு இப்போ  .பக்கவாதத்தால் கையையும் காலையும் இழந்து நிக்கறே.இன்னும் சாப்பிடணுமா. வேண்டாமே விட்டுடேன் என்றார்.
G.R.: பெரியவா நான் எல்லாத்தையும் ஒரே ராத்திரியில் விட்டுடுவேன்.ஆனால் சாதம் விடுவதற்கு மட்டும் எனக்கு ஒரு பத்து நாட்கள் அவகாசம் கொடுங்கள் பெரியவா என்றேன்.
பெரியவா: பத்து நாளிலே  மேலே மேலே சாப்பிட்டு என்ன காணப்போகிறாய். வாழ்க்கையில் ஒன்றை மறந்து விடாதே. வாழ்க்கையில் எல்லா  படிப்பும்  இருந்து ஞானமும்  இருந்தும் நிறைய பேர் தோத்துபோறாளே ஏன் தெரியுமா?
ஒரு நல்ல விஷயத்தை முடிவு செய்தால் அந்த வினாடியே  அதை செயல்படுத்தனும். தள்ளிப்போட தள்ளிப்போட உன்னுடைய மனசு உன்னை வேறு திசைக்கு இழுத்து செல்லும். உனக்காக காத்திருந்த பொன்னான வாய்ப்புக்கள் அணைத்தும் உன்னை விட்டு விலகி விடும்.. மறுபடியும் வந்த வாய்ப்புகள் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது.உனக்கு  அந்தநிலைமை தேவையா. வேண்டாமே மத்தவாளும் இதை தெரிஞ்சுக்கட்டும்… இதை நான் சொன்னதாக எழுது என்றார்.
பிராப்தம் இருக்கறவா படிக்கட்டும்.. யார் படிக்கிறாளோ   அவா மனசுலே நிச்சயம் ஒரு மாற்றம் வரும்..படித்தவர்கள் உன்னிடமே சொல்லுவார்கள். அதுனாலே நீ இந்த நொடியில்  இருந்து அரிசி சாதத்தை விட்டுடு. மத்தியானம் கோதுமை சாதம் சாப்பிடு. உன்னால் நிச்சயம் முடியும். என்ன விட்டுடறயா. என்று மிரட்டும் தொனியில் கேட்டார்.
உன்னை  வைத்துதான் நான் எல்லோர்க்கும் சொல்லறேன்.இதுவே உனக்கு பெரிய புண்ணியம். இந்த நொடியில் இருந்து நீ அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. என்றார்
G.R.: பெரியவா கோவில் ப்ரசாதங்களுக்கு விதி விலக்கு உண்டா பெரியவா என்றேன்.
பெரியவா: உனக்கு எங்கே சாதம் சாப்பிட வாய்ப்பு  கிடைக்கும்னு பாத்துண்டே இரு. சாப்பிடு கோவில் ப்ரசாதங்களுக்கு பாதகம் இல்லை நன்னா சாப்பிடு என்றார்

மஹாபெரியவாளின் இந்த பயிற்சி

எனக்குமட்டுமல்ல உங்களுக்கும் தான்

என்னுடைய தாத்தாவை நான் பார்த்ததில்லை

பார்த்திருந்தாலும் இப்படி ஒரு

தாத்தாவை பார்த்திருக்க மாட்டேன்

அந்த  வானத்தில் இருக்கும் பரமனே

குருவாகவும் தாத்தாவாகவும் எனக்கு

வாய்க்கவேண்டும் என்றால்

இது யார்செய்த பாக்கியம்

எவருடைய புண்ணியம்? நான் யார்?

எல்லாமே பதில் இல்லாத  கேள்விகள்

இருந்தாலும் உண்மை நிலையை உணர்ந்து விட்டேன்

என்னை அழைத்து ஆட்கொண்ட பரமேஸ்வரன்

உங்களை ஆட்கொள்ள எவ்வளவு நேரம் ஆகும்

இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்..

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்
காயத்ரி ராஜகோபால்

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-032

பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-032

பிரதி புதன்கிழமை தோறும்

குமரேசன் மாமா தம்பதியினர்

இந்தத்தொடர் இந்த வாரத்திலிருந்து மஹாபெரியவளுக்கு கைங்கர்யம்  செய்துகொண்டிருந்த இப்பொழுதும் செய்துகொண்டிருகிற புண்ணிய ஆத்மாக்களை பற்றி எழுத முடிவு செய்தேன்.  இந்த முயற்சி மஹாபெரியவளின் உத்தரவு.
இன்று காலை நான் பூஜையில் இருந்தபோது பின்வருமாறு மஹாபெரியவா உத்தரவிட்டார்.
ஏன்டா நீ எல்லா பக்தர்களின் அனுபவங்களையும் எழுதிண்டு இருக்கே. எனக்கு கைங்கர்யம் பண்ண ஆத்மாக்களை பற்றி எப்போ எழுதப்போறே. நான் சொன்னேன் நீங்கள் உத்தரவு கொடுத்தால்   இப்பவே ஆரம்பிச்சுடறேன் பெரியவா.என்று. இன்னிக்கே ஆரம்பிடா. என்று சொன்னவுடன்  இன்றே ஆரம்பித்து விட்டேன்.
இந்தத்தொடரின் முதல் அணுக்கத்தொண்டர் குமரேசன் மாமா. அன்றிலிருந்து இன்றுவரை ஸ்தூலத்திலிருந்து சூஷ்மம்வரை மாமா அவருடைய இறைப்பணியை  தொய்வில்லாமல் மனமுருகி செய்து வருகிறார். மாமாவின் எண்ணங்கள் செயல்கள் எல்லாவற்றிலும் மஹாபெரியவாதான்.
நமெக்கெல்லாம் பரமேஸ்வரன் அனுகிரஹித்தாலோ கனவில் தரிசனம்  கொடுத்தாலோ  அல்லது நம் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தாலோ நமக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்து விட்டதாக சந்தோஷப்படுவோம்.
இதற்கே பூர்வ ஜென்மத்தில் என்ன புண்ணியம் பன்னினோமோ என்று நமக்கு நாமே மார்தட்டிக்கொள்வோம். நினைத்துப்பாருங்கள் அந்த பரமேஸ்வரனுடையே தூங்கி சாப்பிட்டு வாழ்ந்து கைங்கர்யம் செய்தே வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கும் குமரேசன் மாமாவும் மாமியும் எத்தனை புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.
மஹாபெரியவா வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தும் ஒரு முறை கூட தரிசனம் செய்யவில்லையே என்னும் ஏக்கமே இனிமேல் உங்களுக்கு  வேண்டாம். மஹாபெரியவளுக்கு அன்று தொடங்கி இன்று வரை கைங்கர்யம் செய்யும் அணுக்கத்தொண்டர்களில் ஒருவரான குமரேசன் மாமாவை ஒரு முறை காஞ்சி சென்று இரு பெரியவாளையும் சேவித்து குமரேசன் மாமாவையும் பார்த்துவிட்டு  மஹாபெரியவளின் அதிஷ்டானத்தில் அமைதியாக அமர்ந்து ஒரு மணி நேரம் த்யானம் செய்தால் உங்கள் மனதுக்கு அமைதி மட்டுமில்லை உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வும் கிடைக்கும் என்பது நிச்சயம்.

இன்னும் என்ன யோசனை.

உடனே கிளம்புங்கள் காஞ்சிக்கு

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு

ஒரு தீர்வை காணுங்கள்

வாருங்கள் குமரேசன் மாமா தான் அனுபவித்த அற்புத அனுபவங்களை உங்களுடன்  காணொலி மூலம் பகிர்ந்துகொள்ள  காத்திருக்கிறார்.இந்த காணொளியிலிருந்து ஒரு சில அற்புதங்களை உங்களுக்காக எழுதுகிறேன்.

 மஹாபெரியவா விஸ்வரூப தரிசனம் காணுங்கள்.

அற்புதம்-1

கோவில் கோபுரத்தின் உச்சியிலிருந்து

கீழே விழுந்தால் என்ன ஆகும் தெரியுமா

குமரேசன் மாமா விழுந்தார்  

மேலே படியுங்கள் மீதியை காணொளியில் காணுங்கள்

ஒரு முறை மஹாபெரியவா காஞ்சி பிரும்மபுரீஸ்வரர் கோவிலின் கோபுரத்தின்  மேல் ஏறி கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்றச்சொன்னார். மாமாவும் மேலே ஏறி தீபம் ஏற்றி விட்டார். கீழே இறங்கும் பொழுது கால் இடறி கோபுரத்தின் உச்சிலிருந்து தலை கீழாக விழும் பொழுது பரமேஸ்வரன் எப்படி மாமாவை தாங்கி பிடித்து காப்பாற்றினார் என்பது அதிசயத்திலும் அதிசயம். நீங்களும் காணொளியை பார்த்து அதிசியுங்கள்.

அற்புதம்-2

முன் பின் தெரியாதவர்களுக்கு

அவர்கள்  இறந்து விட்டால்

நீங்கள் மோக்ஷ தீபம் ஏற்றுவீர்களா

மஹாபெரியவா உத்தரவின் பேரில்

குமரேசன் மாமா எத்தனை ஆயிரம்

 மோக்க்ஷ தீபம்   ஏற்றினார் 

காணொளியை பார்த்து நீங்களும் அதிசியுங்கள்

இன்னும் எத்தனையோ அடுக்கிக்கொண்டே போகலாம். பார்வை இழந்த அக்காவிற்கு பார்வை கிடைத்த அதிசயம், சிறிய குழந்தைக்கு தலையில் கரப்பான் என்று தோல் வியாதி வந்து ஒரு தேங்காயில் எப்படி சரியானது, குழந்தை பருவம் கூட கடக்காத குமரேசன் மாமாவுக்கும்  மாமிக்கும் எப்படி கன்னிகாதானம் நடந்தது என்பதை எல்லாம் இந்த காணொளியில் கண்டு மஹாபெரியவளின் தரிசனத்தை அனுபவியுங்கள்

கீழே காணொளி லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டு அனுபவியுங்கள்

. https://www.youtube.com/watch?v=ChZt-TV5vWQ&t=2860s

Play time: 56 minitues 53 seconds

 

விதைத்தவன் உறங்கினாலும்

விதை உறங்காது

மஹாபெரியவா அன்று விதைத்த

விதைகளில் ஒன்று குமரேசன் மாமா

முளைத்த விதை

இன்றும்  வரை ஓயாமல்

வளர்ந்து கொண்டேயிருக்கிறது

Hara Hara Shankara Jaya Jaya Shankara

காயத்ரி ராஜகோபால்

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-033

மஹாபெரியவாளின் அற்புத சாரல்கள்-033

பிரதி செவ்வாய்க்கிழமை தோறும்

இறைவனின் அவதாரங்கள்

எத்தனையோ

நாம் இப்பொழுது ஒரு அவதாரத்தையாவது காண இயலுமா

நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்த

பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவளை பார்த்திருக்கிறோம்

இறைவனின் குரலை கேட்டிருக்கிறோம்

நம் தேவைகளை சொன்னால்

உடனே தருவதையும் அனுபவித்திருக்கிறோம்

அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான் இந்த பதிவு

ஒரு வயதான தம்பதியினர். கணவர் கிருஷ்ணமூர்த்தி அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர். இவருடைய மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற  ஒரு பெண்.  திருமணமாகி எல்லா சடங்குகளும் செய்தாகி விட்டது.பெண்ணும் தாயாகும் பாதையில் பயணித்து கொண்டிருந்தாள்.
பிரசவமாகும் நாளும் வந்தது. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கு அப்படியொரு சந்தோஷம். இருக்காதா பின்னே!. ஒரு மனிதன் எப்பொழுது பூரணத்துவம் அடைகிறான் தெரியுமா? பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்னும் வாழ்த்தில் பதினாறாவது செல்வம் பேரனை பெறுவது.இதைப்பற்றி என்னுடைய இந்து மதம் ஒரு வாழும் முறை பதிவில் எழுத்தின் இருந்தேன்.
சுப்ரமணியன் எல்லா குழந்தைகளையும் போல் நன்றாகவே தவழ்ந்தான். தாத்தாவும் பாட்டியும் இரு   வேறு இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேரன் சுப்பிரமணியத்தை அழைப்பார்கள். பேரனும் தாத்தாவுக்கும் இடையே உள்ள தூரத்தை தவழ்ந்து தவழ்ந்து வருவதை கண்களில் ஆனந்த கண்ணீருடன் ரசித்தார்கள். பேரனை அள்ளி உச்சி முகந்தார்கள்.இது வரை சரி.
இதற்கு மேல்தான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பேரன் மெதுவாக பிடித்து கொண்டு நிற்கும் பருவம். நிற்க முடியவில்லை. நிற்க முயலும் பொழுது கால்கள் மடங்கி கீழே விழுந்து விடுவான். குழந்தைகள் தத்தி தத்தி நடை பயிலும் தருவாயில் கீழே விழுவதும் மீண்டும் எழுவதும் சகஜம் தானே என்று நீங்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.
நீங்கள் நினைப்பது சரியே. எதுவரை என்றால் ஒரு வயது வரை. ஆனால் இரண்டரை வயதாகியும் பேரன் சுப்ரமணியனால்.  எழுந்து நிற்க முடியவில்லை.. இறைவன் எல்லா சந்தோஷத்திலும் ஒரு குறையை வைப்பான் என்பதை  நாம் சொல்ல கேள்ளிவிபட்டிருக்கிறோம்.   . ஆனால் இந்த குறை நெஞ்சை கசக்கி பிழியும் சோகமல்லவா.
தாத்தாவும் பாட்டியும் வயதான காலத்தில் தங்கள் சோகத்தை கூட மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. யார் என்ன சமாதானம்  சொல்ல   முடியும்.. வேண்டும் வரை இறைவனிடம் முறையிட்டார்கள்.
ஆனால் எந்த பதிலும் கிடைக்க வில்லை..சுற்றமும் சொந்தங்களும் பயமுறுத்தினார்கள். வேண்டமென்றே இல்லை. வேறு என்னசொல்ல முடியும். அவர்கள் சொன்னது இதுதான்.
பேரன் சுப்பிரமணியனை இப்படியே விட்டுவிட்டால் இருபத்தி ஐந்து வயதில் அவனுக்கென்றே ஒருவர் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட வேண்டும்.  . அவனை எதாவது ஒரு நல்ல மருத்துவரிடம் காண்பியுங்கள் என்று ஆலோசனை செய்து விட்டு சென்று விடுவார்கள்.
ஏதற்கும் ஒரு நேரம் காலம் வரவேண்டுமல்லவா. காலமும் வந்தது.நேரமும் வந்தது. கிஷ்ணமூர்த்தியின் குடும்ப நண்பர் ஒருவர் மஹாபெரியவாளை பற்றி சொல்லி அந்த பரமேஸ்வரன் மனது வைத்தால் எல்லாம் நல்ல படியாக முடியும். உங்கள்பேரன் நடக்க ஆரம்பித்து விடுவான்.என்றார்.
கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கு அந்த இறைவனே நேரில் வந்து சொன்னது போல இருந்தது. நாம்  ஒரு இக்கட்டில் இருக்கும் போது எல்லா வழியும் அடைபட்ட பிறகு ஒரு சிறு நம்பிக்கை கூட கடவுளாக காட்சியளிக்கும். அப்படிதான் இவர்களுக்கும். மஹாபெரியவா பரமேஸ்வரனாகவே காட்சி அளித்தார். இவர்களுக்கு அவ்வளவாக மஹாபெரியவாளை பற்றி தெரியாது.
ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து வாடகை கார் அமர்த்திக்கொண்டு காஞ்சிபுரம் சென்றனர். அன்று மடத்தில் ஏகப்பட்ட கூட்டம்.வழக்கத்தை விட கூட்டம் அதிகம். எல்லோரும் வரிசையில் நின்று  தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.
தாத்தா கிருஷ்ணமூர்த்தி பேரனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டே வரிசையில் நகர்ந்து கொண்டே இருந்தார். கூட்டத்தை பார்த்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்னொருநாளில் வந்து மஹாபெரியவாளை சாவகாசமாக தரிசனம் செய்து விட்டு அப்பொழுது தங்களுடைய பேரன் பிரச்னையை சொல்லி விடலாம் என்று நினைத்தார்.
தாத்தா நினைப்பதை மஹாபெரியவா நன்றாக படித்து விட்டார். இவர்களின் முறையும் வந்தது.கூட்டம் அதிகமாக இருந்ததால் கைங்கர்யம் செய்பவர்கள் நகருங்கள் என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார். மஹாபெரியவா தன்னுடைய ஒரு விரலால் அந்த கைங்கர்யம் செய்பவரை கண்டித்தார்.
இந்த சமயத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மஹாபெரியவாளிடம் பேரனுடைய பிரச்னையை சொல்ல முயன்றார். மஹாபெரியவா அவரை நிறுத்த  சொல்லிவிட்டு ஒரு ரஸ்தாளி வாழைப்பழத்தை உரித்து பேரன் சுப்ரமணியத்திடம் நீட்டினார்.
கிருஷ்ணமூர்த்தியும் பேரன் சுப்பிரமணியத்தை குனிந்து மஹாபெரியவா அருகில் வாழைப்பழத்தை வாங்கும் படி கொண்டு போனார்.  பேரனும் பழத்தை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.
அங்கு கூடியிருந்த பக்தர்கள் எல்லோரும் குழந்தை சுப்பிரமணியத்தை ஆசையோடு பார்த்தார்கள். மஹாபெரியவாளே வாழை பழத்தை உரித்து குழந்தையின் கையில் கொடுத்தால் அந்த குழந்தை எவ்வளவு   புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமா. அந்த குழந்தை நடந்திருக்கும் என்று.
காஞ்சியில் மஹாபெரியவாளிடம் விடை பெற்றுக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் தங்களுடைய வீட்டிற்கு திரும்பினர். வீடு வந்து சேந்த சில நாட்களில் நண்பர் ஒருவர்  இந்த மாதிரி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஒரு மருத்துவமனை இருப்பதாகவும் அங்கு சுப்பிரமணியனை கொண்டு   சேர்க்க சொல்லி பயிற்சி கொடுக்க சொன்னார்.
குழந்தை சுப்பிரமணியமும் அந்த மருத்துவமனையில் சேர்ந்து பயிற்சி எடுத்து கொண்டான். இன்று பேரன் சுப்ரமணியத்திற்கு வயது இருபத்திநாலு ,அவருக்கு இணையாக யாரும் நடக்க முடியாது. அவ்வளவு ஒரு வேகம் நடையில்.

நடக்கும் என்பர் நடக்காது

நடக்காது என்பர் நடந்து விடும்

இது நம்முடைய லௌகீக வாழ்க்கையில்

மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்தில்

நிச்சயம் எதுவும் நடக்கும்

என்ற எழுதப்படாத விதி

இங்கு நடக்காது என்பதற்கு

இடமே இல்லை

இந்த இறை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி

பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா

ஹர ஹர சங்கர ஜய ஜய சக்கர

காயத்ரி ராஜகோபால்